Saturday, December 17, 2011

வள்ளலார்

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !

நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் சமய மதம் சாதியின் அடிப்படையில்தான் வாழ்ந்து வருகிறோம் அதனால் அனைத்திலும் தொவியே அடைந்து வருகிறோம் அன்பு காதல் நட்பு அப்பா அம்மா சுற்றம் மக்கள்அரசியல் ஆன்மீகம் அணைத்தும் துன்பம் துயரம் அச்சம் பயம் நிறைந்ததாகவே உள்ளது இதற்கு என்ன காரணம் .

உண்மைக்கு புறம்பான பேசாத தெய்வங்களும் ,அதனை மக்களுக்கு அறிமுகப் படுத்திய, வழிகாட்டிய பொய்யான கற்பனை கதைகளானஆன்மீக நூல்க்களும்தான் என்பதை நாம் அறியாமல் இருந்தாலும்,இந்த உலகத்தை உண்டாக்கிய,உருவாக்கிய அருட்பெரும்ஜோதி என்னும் இயற்கை உண்மையான கடவுள் ஒரு மாபெரும் மாற்றத்தை 1874 ,ஆம் ஆண்டு ,திரு அருட் பிரகாச வள்ளலார் மூலமாகஅறிவித்து உள்ளார்

அந்த அறிவிப்பை அறிவின் மூலமாக சிந்தியுங்கள்!

இனிமேல் எல்லா உலகத்தும் சமரச சுத்த சன்மார்க்கம் ஒன்றே வழங்கும் .இதற்கு எவ்விதப் பட்ட தடைகளும் இல்லை .தடையற்ற உண்மை நெறியான சமரச சுத்த சன்மார்க்க உண்மை நெறியான பெருநெறி விரைவில் வழங்கும் அதன் மென்மேலும் வழங்கும்

பலவகைப் பட்ட மத பேதங்களும் .சமய பேதங்களும் சாத்திரப் பேதங்களும் ,சாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் .போய் சமரச சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் ஒன்றே விளங்கும் இது கடவுள் சம்மதம் .

இப்போது வருகிற நமது கடவுள் ,இதற்கு முன் சமய மத சாத்திரங்களில் வந்த்தாகச சொல்லுகின்ற பல வகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுள்,தேவர்,அடியார்,யோகி ,ஞானி,முதலானவர்களில் ஒருவரும் அல்ல !

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லா தேவர்களும் ,எல்லா கடவுள்களும் .எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும் ,எல்லா ஞானிகளும் .எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் இருந்து ஒரு சிறிய அருளைப் பெற்று வாழ்ந்தவர்களாகும்.அவர்களை உண்மையான கடவுள்கள் என்று நம்பிக்கை வைத்து உலக மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறீர்கள் இனிமேலும் உங்களை அழிய விட மாட்டேன் என்று எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வெளியிட்டு உள்ளார் .

மேலே கண்ட அறிவிப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் வெளியிட்டு உள்ளார் .இப்போது நாம் வழிபட வேண்டிய உண்மைக கடவுள் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும் .அவர்தான் நேரடியாக உலகத்தை ஆண்டு கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து உண்மை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் நாம் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் நேரடியாக கிடைக்கும் .

1874 ,ஆம் ஆண்டுக்கு பிறகு உலகம் எந்த எந்த மாற்றங்கள் அடைந்து வருகிறது என்பதை சிந்தித்து பாருங்கள் உண்மை விளங்கும்

ஆதலால் பேசாத பொய்யான உருவம் உள்ள பொம்மைக் கடவுள்களை வழிபடாமல் ,எல்லா உயிர்களிலும் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் உண்மை தெய்வமான அருட்பெரும்ஜோதியை வழிபாடு செய்யுங்கள் அதுவே மனித வாழ்க்கையின் முக்கிய கடமையும் கட்டாயமுமாகும் .

உண்மைக கடவுள் பற்றி ஒருபாடல் !

அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட் சாறும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்த்த் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி யீந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்கு கின்ற தெய்வம் அதே தேயுய்வம் !

உண்மையை அறிந்து கொள்வோம் உண்மையுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.

"காவடிச்சிந்து புகழ்" அண்ணாமலை ரெட்டியார்

"காவடிச்சிந்து புகழ்" அண்ணாமலை ரெட்டியார்

இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் "சிந்து இசை" என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச் செய்யும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் ஏற்கச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவானது காவடிச் சிந்து.

இது புதியதொரு இலக்கிய விருந்தாகும். இப்புதிய விருந்தை உருவாக்கி வழங்கியவர் ஓர் இளைஞர். அவர் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். அவர் தான் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்.


தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்துவிட்டார். அதைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம்.

ஒரு முறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் "தமைய பருவதம்" என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, "அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?" என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், "தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா" என்று பணிவுடன் கூறினார். அதைக் கேட்ட ஆசிரியர், "அப்பா அண்ணாமலை! உன் புலமைப் பசிக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க" என்று ஊக்கப்படுத்தி, அவருக்கு விடைகொடுத்து அனுப்பினாராம்.

சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார்.

தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், "இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.

அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாத சுந்தரதாசுத்துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடிய பாடல்களைக் கேட்ட அரசர், "இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்! இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகிறேன்" என்றார். அரசரின் உரையைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார்.

அரசரைப் பார்த்து, "இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா என்பதைத் தாங்கள் பரிசோதித்து உணரலாமே" என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, "காரிகை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருள் துறை அமைய ஒரு கட்டளைக் கலிப்பா இயற்றுக" என்றார். அண்ணாமலை உடனே பாடினார். பாடலைக் கேட்டு மன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின் திறமை கண்டு வியந்தார். அவரது கவித்திறமை கண்ட அரசர், அவரை முகவூர் இராமசாமிப் புலவரிடம் இலக்கணம் கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்று வந்தார். பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அதன் தலைவராயிருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டார். மேலும், அப்போது ஆதீனத்தில் இருந்த உ.வே.சாமிநாதய்யரிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணிய தேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார்.திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார்.

ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார்.மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார்.

வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.

"சீர்வளர் பசுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ்அல் லாதினிய
தெள்ளமுதும் அயிலான்
போர்வளர் தடங்கையுறும் அயிலான் - அவன்
பொன்னடியை இன்னலற
உன்னுதல்செய் வாமே."

என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார்.

பாடல் கேட்ட அனைவரும் "முருகா முருகா" என்று கூறி மெய் மறந்தனர்.

எத்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு, வெவ்வேறு துறை. எல்லாம் புதுமை, எதுகை, மோனைகள் வந்து ஏவல் கேட்டன.

இயைபுத்தொடை அடிதோறும் அணி வகுத்து நின்றது. அன்றிலிருந்து, "வாக்கிற்கு அருணகிரி" என்ற வாசகம், "வாக்கிற்கு அண்ணாமலை" என்று விரிந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச்சிந்து மலர்ந்தது.

அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது.

வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை.

1891ஆம் ஆண்டு தை மாதம் அமாவாசையன்று தமது 29வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நன்றி:- தினமணி

Saturday, December 10, 2011

காமராஜர்

பத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை!

சொத்து சுகம் நாடார்

சொந்தந்தனை நாடார்

பொன்னென்றும் நாடார்

பொருள் நாடார்

தான்பிறந்த அன்னையையும் நாடார்

ஆசைதனை நாடார்

நாடொன்றே நாடித் – தன்

நலமொன்றும் நாடாத

நாடாரை நாடென்றார்

-பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை. இந்த வரிகளுக்கு ஒரு விளக்கவுரை எழுதியதுபோல, விகடன் இந்த வாரம் பெருந்தலைவர் பற்றிய 25 குறிப்புகளைத் தந்துள்ளது. அந்தக் கட்டுரை…

னம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!

‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

ரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!

ன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!

கன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

ந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!

ரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

த்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!

ங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

வரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

டிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

றாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

னது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

ன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

நன்றி-ஆனந்த விகடன்

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் திண்டிவனத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முத்துராம ரெட்டி ரங்கநாயகி தம்பதியருக்கு ஓர் தவப்புதல்வன் பிறந்தான். அந்தக் குழந்தைதான் பின்னாளில் சென்னை மாகாண அரசியலில் பெருமைக்குரியவராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆவார். அரசியலில் நாணயம், ஒழுக்கம், எளிமை, பொறுப்புணர்ச்சி, கடமை தவறாமை இப்படிப்பட்ட தவக்குணங்கள் பெற்று விளங்கியவர்கள் மிகச் சிலரே. அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராகவும், பின்னாளில் காமராஜ் அவ்வளவு குணங்களையும் தன்னகத்தே எற்றுக் கொண்டவராக விளங்க அவருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் இந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தான்.

இளம் வயதில் தந்தையை இழந்த ஓ.பி.ஆர் தன் கல்வியை மட்டும் விடாமல் தொடர்ந்தார். கற்பதில் ஆர்வமும், கற்றதை நடத்தையில் காட்ட ஊக்கமும் உடையவராக விளங்கினார் இவர். இலக்கணம் கற்றார், சமய, ஆன்மிக, நீதி நூல்களைக் கற்றார், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் கசடறக் கற்றார். அவரது அறிவும் ஞானமும் விசாலமடைய அடைய அவர் சிந்தனையும் பரந்து விரிந்ததாக, 'சர்வோ ஜனஹ ஸுகினோ பவந்து' இவ்வுலக மாந்தரெல்லாம் நலமோங்கி வாழ்க எனும் மந்திரத்தைத் தனது வாழ்க்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு விளங்கினார். ஊருக்குள் இவருக்கு நல்ல பெயர், போதாதற்கு இவர்தான் அவ்வூரின் மணியகாரர். மக்கள் இவருக்கு அளிக்கும் மரியாதைக்குக் கேட்க வேண்டுமா? உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்போர் நேர்மை, இரக்கம், தூய்மை இவற்றின் இருப்பிடமாக இருந்தால் கேட்க வேண்டுமா? இவரிடம் மக்கள் அன்பு மட்டுமல்ல, பக்தியே செலுத்தி வந்தார்கள்.

இவர் அடிப்படையில் ஒரு விவசாயி. தானே களத்தில் இறங்கி விவசாயம் பார்த்து, அதில் தேவையான முன்னேற்றங்களைச் செய்து அனுபவ விவசாயியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷியிடம் இவருக்கு ஈடுபாடு, பக்தி. தியாகி வெங்கம்பூர் சாஸ்த்திரி என்றொருவர். அவர்தான் ரெட்டியார் மனதில் தேசிய விதையை ஊன்றி, அதை நன்கு வளர்த்து விட்ட அரசியல் குரு. இவரது அயராத காங்கிரஸ் பணி, தன்னலமற்ற தொண்டு இவரை 1930ஆம் ஆண்டில் தென் ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆக்கியது. இவர் தென் ஆற்காடு மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்து நாட்டின் அரசியல் நிலமையை மக்களுக்கு விளக்கி, கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

காந்தி ஆசிரமம் ஒன்றை சிறுவந்தாடு எனும் கிராமத்தில் தொடங்கி நடத்தினார். தென் ஆற்காடு மாவட்டத்தில் 1927 தொடங்கி 1934 வரையிலான காலகட்டத்தில் பல காங்கிரஸ் மகாநாடுகளைக் கூட்டி மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு காலத்தில் தென் ஆற்காடு மாவட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் தலமை அகமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனி கவர்னராக இருந்த இடம் கடலூர்தான். இங்குள்ள ஒரு மைதானத்தில் எந்தவொரு நிகழ்ச்சியையும் பொதுமக்கள் நடத்தத் தடை இருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஓமந்தூரார் அங்கு ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதிகார வர்க்கம் செய்வதறியாது விழித்தது. ஓமந்தூரரின் புகழ் பெருகியது. கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அம்மாவட்டத்தின் காங்கிரஸ் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.

1920இல் நாகபுரியில் சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குச் சென்று வந்த ஓ.பி.ஆர். தென் ஆற்காடு மாவட்ட அரசியல் மாநாட்டைக் கூட்டினார். இதில் பண்டித அசலாம்பிகை அம்மையார், 'தி ஹிந்து' ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிருஷ்ணசாமி சர்மா வ.உ.சி. தண்டிக்கப்பட்டபோது கரூரில் அந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து பேசிய பேச்சுக்காக சிறை தண்டனை பெற்றவர்.

1933இல் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து மாவட்ட மாநாட்டை நடத்தினார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதுதான் அவரது முதல் சிறை வாசம்.

அதற்கு அடுத்த ஆண்டே, மகாத்மா காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டாம் முறையாக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு இவர் ஊரின் ஓரத்தில் ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் வசிக்கலானார். அரசியலும் ஆன்மீகமும் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் பலரும் இவரைத் தேடி அங்கு வரலாயினர். அந்தக் காலத்தில் தென் ஆற்காடும், செங்கல்பட்டும் இணைந்தது ஒரு பாராளுமன்றத் தொகுதி. இங்கு எம். பக்தவத்சலத்தின் மாமனாரும் பிரபல காங்கிரஸ் தலைவருமான முத்துரங்க முதலியார் காங்கிரஸ் சார்பிலும், கேசவன் எனும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் இங்கு போட்டியிட்டனர். இதில் முத்துரங்க முதலியார் வென்றார்.

1936 தேர்தலில் இம்மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான போட்டி காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும். இதில் ஓ.பி.ஆர். முனைந்து ஈடுபட்டு காங்கிரஸ் சார்பில் ந.சோமையாஜுலு, பசும்பொன் தேவர், ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி ஆகியோரை அழைத்து கூட்டங்கள் நடத்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் பயனாக அகில இந்தியாவும் ஓ.பி.ஆரை. கவனிக்கத் தொடங்கியது. யார் இந்த சாதனையாளர் என்று. ஓ.பி.ஆரின் பெயர் தமிழகமெங்கும் பரவியது.

1938இல் இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். இவரது புரட்சிகரமான போக்கும், முற்போக்குச் சிந்தனைகளும் இவருக்கு கட்சியிலும் சரி, உறவிலும் சரி எதிர்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாத, ஊழலற்ற, நேர்மையான இவரைப் போன்ற அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம்தான். என்ன செய்வது? புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்பதற்காகவும் இவர் பாடுபடலானார். இவரை ஆதரித்துப் பல தலைவர்கள் அன்று அந்த போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர்.

1942 ஆகஸ்ட் 8, பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போரில் ஒன்று செய், அல்லது செத்து மடி எனும் வேத வாக்கியத்தை மகாத்மா தொண்டர்களுக்கு வழங்கினார். அன்று இரவே அங்கு வந்திருந்த அத்தனை தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஓமந்தூராரும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு 18 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இது இவரது நான்காவது சிறை வாசம்.

இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும் உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது. சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும், அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல் ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும் அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும், ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது. வாழ்க ஓமந்தூரார் புகழ்!